சங்கரம்மா (சிறுகதை)
சங்கரம்மா
எங்க அம்மா சங்கரம்மாவும், சீனியம்மாவும் பருத்திக் காட்டுக்குள்ள பருத்தி திருடுறதுல இருந்து, கரிசக்காட்டுக்குக் களை எடுக்க போறது வரை எல்லாத்துலயும் சேக்காளிக தான். சீனியம்மா வீட்டுகாரரும், எங்க அய்யாவும் பக்கத்து பக்கத்து அச்சாவீஸ்ல வாட்ச்மேன் வேலை பாத்தாக. அந்தந்த அச்சாவீசுக்குள்ளயே தங்குறதுக்குச் சின்னதா ஒரு வீடு போட்டு கொடுத்திருந்தாக. இரண்டு அச்சாவீசுக்கு இடையில கம்பிவேலி இருக்கும். அந்த வேலில ஒரு ஆள் உள்ள நுழைஞ்சு போற அளவுக்கு இருக்குற கம்பிய வெட்டி ஓட்டை போட்டு ரெண்டு வீட்டு ஆளுகளும் அங்குட்டும் இங்குட்டும் போயிட்டு போயிட்டு வந்துகிடுவோம்.
சீனியம்மா காட்டு வேலைக்கு போயிட்டு வந்தா நேரா எங்க வீட்டுக்கு தான் வரும். எங்க வீட்டை ஒட்டி எங்கய்யா வச்ச வேப்பமரம் ஒன்னு நல்லா வளர்ந்து பெருசா இருக்கும். அதோட வேரு மேல எழும்பி பெரிய சாரப் பாம்பாட்டம் போகும். சீனியம்மா வந்ததும் வராததுமா அந்த வேரு மேல உட்கார்ந்துகிட்டு "ஏத்தா சங்கரம்மா ஒரு வாய் கடுங்காப்பித் தண்ணீ இருந்தா குடுங்கத்தா”ன்னு
சொல்லிட்டு அப்படியே சுவர்ல சாஞ்சிக்கிடும். எங்க அம்மாவும் மெனக்கெட்டுப் போயி வெறவு எடுத்தாந்து அடுப்பப் பத்த வச்சி காப்பித்தண்ணி வச்சுக் குடுக்கும். உடனே சீனியம்மா கூரையில சொருகி இருக்கிற நெளிஞ்ச எவர்சில்வர் கெளாச எடுத்து பக்கத்துல இருக்குற அடிபம்புல தண்ணி அடிச்சு முகத்தை கழுவிட்டு அப்படியே கெளாசயும் கழுவிட்டு வரும். எங்க அம்மா காப்பிச் சட்டிய மேல தூக்கி அந்த கிளாஸ்ல படாம ஊத்தும். ஏன் இப்படி ஊத்துறாங்கன்னு நிறைய தடவ நா எங்க அம்மாட்ட கேட்டுருக்கேன்.
"போடி, போக்கத்தவளே, போயி வேலயப் பாரு, அதெல்லாம் அப்படித்தான். அவுகள நாம தொடக்கூடாதுன்னு சொல்லும். அப்பமும் எனக்குப் புரியல. திரும்பக் கேட்டா உத விழுகும்ன்னு நெனச்சி நா எதுவும் கேட்டுக்கிடல.
எங்க அம்மாவும் ஒரு கிளாஸ்ல காப்பிய ஊத்திட்டு வந்து சீனியம்மா பக்கத்தில வாசப்படில உட்கார்ந்துட்டு பேசுவாக பேசுவாக ஊரு கதை, உலக கதை எல்லாத்தையும். பொம்பளைங்க பேச ஆரம்பிச்சா சொல்லவா வேணும். சீனியம்மா புருஷங்காரன் குடிச்சிட்டு வந்து ரகளை பண்ணுறதுல ஆரம்பிச்சி இந்தா, இவன் அவள வச்சிருக்கான், அந்தா அவன் இவள வச்சிருக்கான்னு அலசி ஆராய்ச்சி, எந்த தியேட்டர்ல எந்தப் படம் நல்லா இருக்கு, எந்த படத்துக்கு எத்தனையாவது ஆட்டம் போறதுன்னும் முடிவு செஞ்சுக்குவாங்க. பேசிட்டு இருக்கும்போதே எங்கம்மா குனிஞ்சி சீனியம்மா காதுல என்னவோ குசுகுசுன்னு பேசும். அதைக் கேட்ட சீனியம்மா பெரு விரலையும், ஆள்காட்டி வெரலையும் தன் வாய் மேல் வச்சி ஆச்சரியப்பட்டு பதிலுக்கு எங்கம்மா காதுல என்னவோ சொல்லும். ரெண்டு பேரும் பலமா சிரிச்சிக்குவாக. ஏன் சிரிக்கிறீங்கன்னு போயி கேட்டா மண்டையில நறுக்குன்னு ஒரு கொட்டு விழுகும்.
அப்படியே ரெண்டு மணி நேரம் போயிரும். சீனியம்மா வீட்டுக்கு கிளம்புற நேரத்துல எங்க அம்மா "செத்த இரு வரேன்னு" எந்திரிச்சு வீட்டுக்குள்ளார போகும். திரும்ப வரும்போது சட்டி நிறைய கம்மஞ்சோறும், கிண்ணம் நிறைய நெத்திலிக் கருவாட்டுக் குழம்பும் எடுத்தாந்து குடுக்கும். சீனியம்மா அதை வாங்கித் தான் கொண்டு வந்திருந்த கூடையில வச்சிருக்குற தூக்குப் போணிக்குள்ள மாத்திட்டு பாத்திரத்தைக் கழுவிக் குடுத்துட்டு போகும்.
ஒரு நாள் ஊர்ல எங்க அம்மாவோட அண்ணன் பொண்டாட்டி தூக்கு போட்டு இறந்து போயிட்டாகன்னு சேதி வந்துச்சி. ஏற்கனவே எங்க அத்தை மனநிலை சரியில்லாமத்தான் இருந்தாக. ஆஸ்பத்திரில போயி காமிச்சிக்கிட்டு இருந்தாங்க. திடீர்னு இப்படி ஆகிப்போச்சு. எங்க மாமாவுக்கு மூணு பிள்ளைக. ரெண்டு ஆம்பள புள்ளைக, ஒரு பொம்பள புள்ள. அத்தைக்கு உடம்பு சரி இல்லைன்றதால எங்க அத்தையோட அக்கா வந்து பொம்பளப் புள்ளைய மட்டும் தூக்கிட்டு போய் அவங்க வீட்டுல வச்சி வளத்தாக. எங்க அத்தை எறந்த பிறகு மாமாவையும் அவங்க ரெண்டு பசங்களையும் எங்க அம்மா டவுனுல ஏதாவது வேல செஞ்சி பொழச்சிக்கலாம்ன்னு எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துடுச்சி.
எங்க அய்யாவப் பெத்த பாட்டிக்கும் எங்க அம்மாவுக்கும் சுத்தமா ஆகுறதில்லை. ஏன்னா எங்க அய்யா எங்க அம்மாவ விரும்பி கல்யாணம் கட்டிக்கிட்டாராம். அது எங்க பாட்டிக்கு பிடிக்கலையாம். அதனால எப்பவும் மாமியாவுக்கும் மருமகளுக்கும் தகராறு தான். இதுல எங்க அம்மா வேற அவங்க அண்ணனையும், அண்ணன் புள்ளைகளையும் கூட்டிட்டு வந்து எங்க வீட்ல வச்சிகிட்டது எங்க பாட்டிக்கு சுத்தமா பிடிக்காம போயிருச்சு. எங்க அய்யாவோட சம்பாத்தியத்த எங்க அம்மா வீட்டு ஆளுக திண்ணு அழிக்கிறாகன்னு வாய் ஓயாம சொல்லிட்டே இருக்கும்.
ஒரு நா வாய் வார்த்தை முத்திப் போய் எங்க பாட்டி எங்க அம்மாவை அடிக்க வந்திருச்சு. அப்ப அங்க உக்காந்திருந்த சீனியம்மா வேகமா எந்திரிச்சு போயி எங்க பாட்டியோட கையப் பிடிச்சிட்டு
"அம்மா, அம்மா விட்ருங்கம்மா, வேண்டாம்மா, பெரியவுக நீங்க போயி இப்படி செய்யலாமாம்மா" அப்படின்னு சொல்லவும் எங்க பாட்டிக்கு வந்ததே கோபம்.
"ஏய், எடுவட்ட சிறுக்கி, எடுடி கைய, எனக்கு எதுக்க நின்னுகிட்டு என்னையத் தொட்டுப் பேசுற அளவுக்கு உனக்கு துளுத்துப் போச்சா? எல்லாம் வீட்டுக்கு வந்த இந்த கேடு கெட்ட முண்டையால வந்தது. சேக்காளி பிடிச்சிருக்களாம் சேக்காளி தராதரமில்லாம. என் மகனை கைக்குள்ள போட்டுட்டு ஆட்டமா ஆடுறா? ஆடு, ஆடு எத்தனை நாளைக்கு இந்த ஆட்டமுன்னு நானும் பார்க்கிறேன்" அப்படின்னு சொல்லிட்டு மகன் வீடுன்னும் பாக்காம மண்ண வாரித் தூத்திட்டு அடுத்த தெருவில் இருக்குற எங்க பெரியப்பா வீட்டுக்கு கோவிச்சிட்டுப் போயிருச்சி.
இதுக்கிடையில எப்படியோ சீனியம்மாவுக்கும் எங்க மாமாவுக்கும் பழக்கம் ஆயிடுச்சு போல. ஒரு நாளு நல்ல மழைக்காலம். மழ அடிச்சிப் பேயுது. எங்க வீட்டுக்கு பின்னாடி இருக்குற கல்வெட்டாங்குழி கொளம் நெரம்பி சின்னக்குளத்துக்கு மாறுகாவா போகுது . சின்னக்கொளத்து கரையில இருக்குறவுக கிடைச்ச பண்டம் பாத்தரத்த வாரிகிட்டு புள்ள குட்டிகளோட கவர்மெண்ட்டு பள்ளிக்கூடத்துக்கு தஞ்சம் போயிட்டாக. எங்க பார்த்தாலும் தண்ணிக்காடா கெடக்கு. அப்படியொரு நாளுலதான் சீனியம்மாவும் , எங்க மாமாவும் ஊர விட்டு போயிட்டாக. சீனியம்மாவோட புருஷங்காரன் மூணு பிள்ளைகளையும் கூட்டிட்டு எங்க வீட்டுக்கு நாயம் கேட்க வந்துட்டாப்ல. எங்க அய்யாவுக்கும் ஏற்கனவே எங்க மாமா குடும்பம் எங்க வீட்டுல இருக்குறது பிடிக்கல. இதான் சாக்குனு எங்க அம்மா கூட சண்ட கட்டுறாரு. எங்க அம்மாவுக்கோ என்ன செய்யறதுன்னு தெரியல. சீனியம்மாவோட பிள்ளைக அழுதுட்டு நிக்கிறத பார்த்து என்ன ஏதுன்னு புரியாம நானும், எங்க அக்காளும், எந்தங்கச்சியும் ஒரு பக்கம் நின்னு அழுகிறோம்.
நாங்க எல்லாரும் ஒன்னு மண்ணா வெளயாண்டுட்டு திரிஞ்சவுக. அவுக அழுகுறதப் பாத்து எங்களுக்கும் அழுக வந்துருச்சி. எங்க அம்மாவோ பேயறைஞ்சா மாதிரி உட்காந்திருக்குது. மொகத்துல உசுரே இல்ல.
எங்கய்யா தான் ஏதோ சமாதானப்படுத்தி அவங்கள அனுப்பி வச்சாரு. அப்புறம் அவுக அந்த அச்சாவீசுல இருந்து காலி செஞ்சிட்டு வேற எங்கயோ போயிட்டாக. இது நடந்து எத்தனையோ வருஷங்கள் ஆச்சு. ஆனா இப்பவும் அந்த மழை நாள்ல அந்த மூணு பிள்ளைகளும் அழுதுட்டு நின்னுட்டு இருந்தது என் மனசுக்குள்ள இருந்து மறையவே மாட்டேங்குது. இப்ப நினைச்சாலும் அந்த மழையும், சீனியம்மா பிள்ளைகளோட அழுகையும் அப்படியே உயிர்ப்பா ஞாபகத்துக்கு வந்து மனச வதைக்கும். பொம்பளைங்கள தியாகிகள் பிள்ளைகளுக்காக எதுவும் செய்வாங்கன்னு இருந்த கற்பனைலாம் அன்னைக்கே நொறுங்கி சுக்கு சுக்கா போயிருச்சு.
அதுக்கு பிறகு ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு என்ன ஆச்சுன்னு தெரியல சீனியம்மா மட்டும் திரும்ப அவங்க வீட்டுக்கு வந்துருச்சு. மாமா எங்க வீட்டுக்கு வந்தா எங்கய்யா திட்டுவாருன்னு ஊர்ல எங்க பாட்டி வீட்டுக்குப் போயிட்டாரு. சீனியம்மா ஊருக்கு வந்துட்டாலும் எங்க அம்மாவைப் பார்க்க வரல. எங்க அம்மாவும் அது பத்தி எதுவும் பெருசா பேசிக்கல.
ஆறு மாசம் கழிச்சு ஊர்ல திடிருன்னு எங்க மாமா செத்துப் போனாரு. எங்க அம்மாவும் எங்க ஐயாவும் எங்களக் கூப்பிட்டுட்டு கிளம்புனாங்க. அப்போ தலவிரி கோலமா சீனியம்மா ஓடி வந்துச்சு.
"யாத்தா சங்கரம்மா, நான் தப்பு பண்ணிட்டேன்த்தா, தப்பு பண்ணிட்டேன். என்னையும் ஊருக்கு கூட்டிட்டு போத்தா. கடைசியா ஒருமுறை அந்த மவராசன் மொவத்தைப் பார்த்துக்கிடுதேன் அப்படின்னு சொல்லிட்டு எங்க அம்மா கால்ல விழுந்து அழுதுச்சு.
சீனியம்மாவுக்கு எப்படி எங்க மாமா இறந்தது தெரிஞ்சுச்சு?. எப்படி சரியா அந்த நேரத்துக்கு வந்துச்சுன்னு? எங்களுக்குப் புரியல. ஆனா பின்னாடி ஒரு நாளு தெரிஞ்சுகிட்டோம். எங்க அம்மா தான் ஆள விட்டு சீனியம்மாவுக்கு சொல்லிவிட்டுச்சின்னு.
எங்கய்யாவோட மொறப்பையும் மீறி சீனியம்மாவைக் கூட்டிட்டுத் தான் எங்க மாமாவோட சாவுக்குப் போனோம். மாமாவோட கால் மாட்டுல உக்காந்துட்டு அழுதுட்டு இருந்த சீனியம்மாவப் பாக்க பாவமாத்தான் இருந்துச்சு.
அவங்களுக்குள்ள என்ன நடந்துச்சி, ஏன் திரும்பி வந்தாகன்னு இதுவரைக்கும் யாருக்கும் எதுவும் தெரியாது. ஒருவேள எங்கம்மாவுக்குத் தெரிஞ்சிருக்கலாம்.
"என்ன உன் மதினிய கூடயே கூட்டிட்டு வந்திருக்க போல" அப்படின்னு சொல்லி சில பேரு ஊருக்குள்ள குத்தலா பேசினாக. அதை எல்லாம் எங்க அம்மா கண்டுக்கல.
அதுக்குப் பெறகு
நா பெரிய மனுசியானப்போ செய்ய வேண்டிய செய்முறையெல்லாம் யாரும் இல்லாத நேரமா வந்து செஞ்சிட்டுப் போச்சி. அதுக்கெல்லாம் எங்கம்மா ஒன்னும் சொல்லல. ஆனா ஏனோ அவுகள சீனியம்மா ஏமாத்திட்டதா மனசுக்குள்ள குமைஞ்சிட்டே இருந்தது.
ரெண்டு பேத்துக்குள்ளயும் இருந்த நெருக்கத்த ஒழுக்கம், சாதி, கௌரவம்ன்ற பேர்ல தொலச்சிட்டு முன்ன மாதிரி பழகவும் முடியாம, மொத்தமா விலகவும் முடியாம தவிச்சிட்டு இருந்தாக.
இந்த நெலயிலதான் காட்டு வேலைக்குப் போகும்போது ஒரு ஆட்டோக்காரன் குடிச்சிட்டு ஆட்டோ ஓட்டிட்டு வந்து எங்கம்மா மேல மோதிட்டான். ரத்தத்துல மிதந்த எங்கம்மாவத் தூக்கி அதே ஆட்டோல போட்டுட்டு தர்மாஸ்பத்தரிக்குக் கொண்டு போனாக.
விஷயத்தைக் கேள்விப்பட்டு அரக்க பரக்க சீனியம்மா ஓடி வந்துச்சி. ரத்தம் ரெம்பப் போயிருச்சி. கால்ல ஆப்பரேஷன் பண்ணும்போது ரத்தம் ஏத்தனும்ன்னு டாக்டருக சொன்னதும் கூடியிருந்தவங்கலாம் முகத்த முகத்தப் பாக்க எங்க அய்யாவும், சீனியம்மாவும்தான் எங்க ரத்தத்த எடுத்துக்கோங்கன்னு சொன்னாக.
எங்க அய்யா முத நாளு ராத்திரி குடிச்சிருந்ததால சீனியம்மாகிட்ட இருந்துதான் ரத்தம் எடுத்து அம்மாவுக்கு ஏத்துனாங்க. அதுக்கப்புறம்தான் ஆப்பரேஷன் செஞ்சி எங்க அம்மா பத்து நாளு ஆஸ்பத்திரில இருந்துட்டு வீட்டுக்கு வந்துச்சி. ஆஸ்பத்தரில இருந்தவரை சீனியம்மாதான் அம்மாவ கூட இருந்து கவனிச்சிகிச்சி.
வீட்டீக்கு வந்த பெறகு சீனியம்மா எங்க வீட்லயே தங்கிருச்சி. அம்மாவப் பாத்துக்க ஆளு வேணுன்றதால எங்கய்யாவும் ஒன்னுஞ் சொல்லல.
தையல் பிரிக்கிற வரைக்கும் நடக்கக் கூடாதுன்னு டாக்கடருக சொன்னதால அம்மா ஒன்னுக்கு, ரெண்டுக்குப் போறதக் கொஞ்சங்கூட மொகஞ்சுழிக்காம சீனியம்மா சுத்தம் பண்ணுச்சி. எங்கம்மாவ நல்லாப் பாத்துகிடுச்சி. எல்லா வேலையும் சீனியம்மாவே செஞ்சதாலே எங்களுக்கு கஷ்டமில்லாம இருந்திச்சி.
எங்கம்மா சீக்கிரமே குணமாகி பழையபடி நடக்க ஆரம்பிக்கவும் வேலையெல்லாம் செய்யவும் ஆரம்பிச்சிச்சி. அதனால சீனியம்மா அவங்க வீட்டுக்குப் போயிருச்சி.
ஒரு வாரம் கழிச்சி அம்மாவைப் பார்க்க சீனியம்மா வந்துச்சி. எங்கம்மா சீனியம்மாவப் பாத்ததும் சந்தோசப்பட்டுச்சி. உட்காருன்னு சொல்லி பழைய கதைகளைப் பேச ஆரம்பிச்சாக. எப்பவும் போல சீனியம்மா எங்கம்மாட்ட காப்பி கேட்டுச்சி. அம்மா காப்பி போட்டுட்டு வரவும் சீனியம்மா எந்திரிச்சி போயி கூரையில் சொருகியிருந்த கெளாச கழுவிக் கொண்டு வந்து நீட்ட எங்கம்மா கெளாசுல காப்பிச் சட்டி படாம காப்பிய ஊத்துச்சி.
இதப் பாத்துட்டு இருந்த எனக்கு ஒன்னுமே புரியாம தல சுத்த ஆரம்பிச்சது.
கருத்துகள்
கருத்துரையிடுக