கனலும் கந்தக பூமி

வயிற்றுப்பாட்டிற்காக

திரி கிள்ளி

கரி மருந்து

வெடிக்குள் பாதியும் 

வயிற்றுக்குள் மீதியும் 

செல்ல வம்பாடு பட்டு

வாழ்க்கை நடத்த

எங்கள் உயிரையும்

துச்சமாக மதித்துதான்

பணிக்கு செல்கிறோம் !!

 

மத்தாப்புக்களின்

வர்ணங்களில் எங்கள்

வாழ்க்கையின்  

பழுப்பேறிய பக்கங்கள்

ஜுவாலிப்பதேயில்லை  !!

 

கிட்டங்கிகள் எரியும்போது

எங்கள் மக்களின்

வாழ்க்கையும்

கனவுகளும் சேர்ந்தே

எரிந்து சாம்பலாகின்றன !!

 

எத்தனை எத்தனை  உயிர்கள்

எரிந்தாலும் , மாண்டாலும் 

திரி கிள்ளும் பயணமும்

சரம் பின்னும் பயணமும்

தொடர்ந்து கொண்டேதான்

இருக்கும் எஞ்சிய

நாட்களை வாழ்வதற்காக !!

 

வருடத்தின் ஒரு நாள்

குதூகலத்திற்கு

வருடம் முழுவதும்

பணயம் வைக்கிறோம்

எங்கள் இன்னுயிரை

வேறு வழியில்லாமல்  !!

 

மனித தவறா ?

இல்லை

இயற்கையின் தவறா ?

எப்பொழுதும் எங்கள்

கந்தக பூமி கனன்று

கொண்டேதான் இருக்கிறது !!

 

வழக்கம்போல

எங்கள் மக்களும்

சுழன்று கொண்டேதான்

இருக்கிறார்கள் !!

 



 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்கரம்மா (சிறுகதை)

கண்ணம்மா

அடர்வன நாதங்கள்