திருப்பாவை பாடல் - 2
ஆண்டாளின் தோற்றம்:
ஆண்டாள் மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்து வந்த விஷ்ணுசித்தர் (இவர் பெரியாழ்வார் எனவும் அழைக்கப்படுகிறார்.) என்னும் அந்தணர் ஒருவரால் ஒரு குழந்தையாக துளசி செடியின் கீழ் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
விஷ்ணுசித்தர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரங்கநாதர் கோவிலுக்கு மலர்கள் கொடுப்பதை தன் கடமையாக கொண்டவர்.
தனக்கென குடும்பம் எதுவுமில்லாத நிலையில் கண்டெடுத்த குழந்தை தனக்காக இறைவனால் வளர்க்கப்பட்ட குழந்தை என எண்ணி அக்குழந்தைக்கு கோதை நாச்சியார் எனப் பெயரிட்டு வளர்க்கலானார்.
ஆண்டாளின் தோற்றம் இவ்வாறே நிகழ்ந்தது.
திருப்பாவை 2 ஆம் பாடல்
----------------------------------
வையத்து வாழ்வீர்காள் நாமும்நம்
பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ
பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம்
நாட்காலே நீராடி
மையிட் டெழுதோம் மலரிட்டு நாம்
முடியோம்
செய்யாதன செய்யோம்
தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும்
கைகாட்டி
உய்யுமா றெண்ணி
உகந்தேலோரெம்பாவாய்
பாடலின் பொருள் விளக்கம்
-------------------------------------
திருப்பாவை முதலு பாடலில் நோன்பு யாரை முன்னிட்டு நோற்பது என்று கூறி தோழியரை
துயில் எழுப்பி அழைத்த ஆண்டாள்
இந்தப் பாடலில் நோன்பு நோற்பவர் செய்ய வேண்டியவற்றையும், விலக்க வேண்டியவற்றையும் கூறுகிறாள்.
திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே நாம் இவ்வுலகில் இருந்து விடுபட்டு அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள்.
நெய் உண்ணக் கூடாது. பால் உண்ணக் கூடாது. அதிகாலையிலே நீராடி விடவேண்டும். கண்ணில் மை தீட்டக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது. (மார்கழியில் பூக்கள் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம் என்பது ஐதீகம்)
தீய செயல்களை மனதாலும் நினைக்கக் கூடாது. தீய சொற்களை சொல்வதுகூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள்
சொல்லக்கூடாது. இல்லாதவர்களுக்கும் துறவிகளுக்கும் ஞானிகளுக்கும்
அவர்கள் போதும் என்று சொல்லுமளவிற்கு தர்மம் செய்ய வேண்டும்.
இப்பாடல் 107 வது திருப்பதியான
திருப்பாற்கடல் குறித்து பாடப்படுகிறது.
ஜெயா நவி
கருத்துகள்
கருத்துரையிடுக