திருப்பாவை பாடல் - !

 ஆண்டாளின் திருப்பாவை - 1

இன்று மார்கழி மாதம் முதல் நாள்.
மார்கழி என்றாலே நம் நினைவிற்கு வருவது வில்லிபுத்தூரை அரசாளும் ஆண்டாளும், அவர் எழுதிய திருப்பாவையும், அதிகாலைப்பனியும் வாயில் கோலங்களும்தான்.
               மனதிற்கினிய ஆண்டாள் பற்றிய குறிப்புகளும், திருப்பாவைப்பாடல்களும் தினம் ஒன்றாக பொருள் விளக்கத்துடன் தரவேண்டும் என்பதே என்னுடைய ஆவல்.

திருப்பாவை பற்றி:
            12 வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் திருப்பாவை.
           இந்நூல் 30 பாடல்களால் ஆனது.
           வைணவ பக்தி நூல்களின் தொகுப்பான  நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் 473 வது பாடலில் இருந்து 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவை பாடல்கள் ஆகும்.
                தமிழ்நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னியர் பாவை நோன்பு நோற்றனர்.
              விடியும் முன்பே எழுந்து ஆற்றில் நீராடி இறைவனை வழிபடுவர்.
              இதனைப் பிண்ணனியாகக் கொண்டு எழுந்ததே இந்நூல்.
            தற்காலத்திலும் பாவை நோன்பு காலத்தில் இப்பாடல் பாடப்படுகின்றன.
ஆண்டாள் பற்றி:
                    ஆண்டாள் 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களில் ஒருவர். 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண் ஆவார்.
                 திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை எழுதியுள்ளார்.
                 வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை எடுத்துரைக்கிறது.
              மேலும் ஆண்டாள் பூமிப்பிராட்டியின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.
           இவரது இயற்பெயர் கோதை நாச்சியர்.


இனி முதல் பாடல்:

------------------------------------
 
மார்கழி திங்கள் மதிநிறைந்த
                                         நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ
                                      நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச்
                                  சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன்
                     நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை
                                 இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண்
     கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே
                          பறைதருவான்
பாரோர் புகழப்    
                     படிந்தேலோரெம்பாவாய்

விளக்கம்:

---------------------
              அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே , சிறப்புமிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே !  மார்கழியில் முழுநிலா ஒளிவீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதா பிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும் கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தரக் காத்திருக்கிறான்.
அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.
                                அன்புடன்
                                 ஜெயா நவி

                
                  

                  
                    
                      
            

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்கரம்மா (சிறுகதை)

கண்ணம்மா

அடர்வன நாதங்கள்